A.R.ரஹ்மான் என்ற பிரமிக்க வைக்கும் மனிதன்..!!



A.R.ரஹ்மான் என்ற பிரமிக்க வைக்கும் மனிதன்..!!

***************************************************************************************************************

இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை தனது இளம் வயதிலேயே யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இசைத் திறமையைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.
இச் சிறுவனின் திறமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுகின்றேன். இத
ு இலங்கையின் இசைக்கலைஞர்களுள் ஒருவரான காலஞ் சென்ற திரு. ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கூறியதாகும்.

ஒரு நாள் ரஹ்மானின் குரு ஒரு பரீட்சை வைப்பதாகக் கூறி தன் தந்தையுடன் சமூகமளிக்குமாறு கூறினார். ரஹ்மான் தந்தையுடன் வந்த பிறகு பரீட்சை ஆரம்பமானது. அதாவது ரஹ்மானுக்கு முன்னால் ஒரு ஹார்மோனியத்தை வைத்துவிட்டு அவரது குரு ஒரு இசைப் பகுதியைக் கேட்கச் செய்தார்.

ரஹ்மான் அதனை நன்றாக செவிமடுத்த பிறகு ஹார்மோனியத்தை ஒரு கறுப்புப் போர்வையால் மூடிவிட்டு கேட்ட இசையை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டுமாறு பணித்தார்.

ரஹ்மானும் அதனை வாசிக்க ஆரம்பித்தார். என்ன ஒரு ஆச்சரியம்! அந்த 10 வயது இளம் பாலகன் கேட்ட இசையை ஹார்மோனியத்தில் ஒரு விசை கூடக் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் ஒரு சிறு தவறேனுமின்றி வாசித்து முடித்தார். தந்தை ஆச்சரியத்தி மூழ்கிக் கிடந்தபோது, ரஹ்மானின் குரு தந்தையை விளித்து "உங்கள் மகனுக்கு நான் ஒன்றும் சங்கீதம் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. உங்கள் மகன் ஒரு இசை மேதை, அவன் எதிர்காலத்தில் பிரமிக்கத்தக்க சாதனைகள் புரிவார்" என்று கூறி ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாராம்.

இந்த சம்பவத்தை வாசித்த பிறகும் உங்களுக்கு இசைப்புயலின் திறமை புலப்படவில்லையாயின்(தயவு செய்து என்மேல் கோபங்கொள்ள வேண்டாம்) நீங்கள் இதற்குமேல் வாசிப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.

தந்தை ஆர். கே. சேகர் மற்றும் தாய் கஸ்தூரி(இவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் கரீமா பேகம் என பெயர் மாற்றம் செய்தவர்) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

இவரது தந்தை ஒரு இசயமைப்பாளராக இருந்தார். தாய் தந்தையர் ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சூட்டிய பெயர் திலீப் குமார் என்பதாகும். இஸ்லாத்தைத் தழுவிய பின்னரே ஏ. ஆர். ரஹ்மான் என அழைக்கப்பட்டார்.

சிறுவன் திலீப் 4 வயதிலேயே பியானோ வாசிக்கக் கற்கத் தொடங்கினான். தந்தையின் அகால மரணத்துக்குப் பிறகு குடும்பத்தைக் காப்பற்றும் கடமைக்குத் தள்ளப்பட்டான் திலீப். எப்படியோ கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றிய திலீப் சாய்ரா என்பவருடன் திருமண பந்ததில் இணைந்தார். கதீஜா, ரஹீமா, அமீன் எனும் பெயர்களில் தற்போது அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

திலீப் தனது 11வது வயதில் கல்வியை இடை நிறுத்திவிட்டு, அன்று திரையிசையில் கொடிகட்டிப் பறந்த இசைஞானி இளையராஜாவின் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளனாக இணைந்தான். மற்றும் அவன் எம். எஸ். விஸ்வ நாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் குழுவிலும் கீபோர்ட் வசித்தான்.

அத்துடன் ஜாகிர் ஹுஸைன் மற்றும் குண்ணக்குடி வைத்திய நாதன் ஆகியோருடன் உலகச் சுற்றுப் பயணங்களிலும் கலந்துகொண்டான். இத்தனை அனுபவங்களும் அவனை ஒரு புலமைப் பரிசிலொன்றைப் பெற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இசைத்துறையில் கற்க வழிசெய்தது.

அவர் அங்கேதான் மேற்கத்திய கிளாஸிக்(Classic) இசையில் பட்டம் பெற்றார். அவர் நாடு திரும்பியதும் பல்வேறு இசைத் துருப்புக்களில் இணைந்து பணியாற்றினார். அத்துடன் அவர் Roots, Magic, Nemesis போன்ற Rock இசைக் குழுக்களிலும் பங்குவகித்தார். இதுவே அவரது தற்போதைய குழு அங்கத்தவர்களான சிவமணி, ரஞ்சித் பெரோட் போன்றோருடன் நிகழ்ச்சி செய்வதற்கு சந்தர்ப்பமாய் அமைந்தது. 1987இல் ரஹ்மானுக்கு Allwyn நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புது வகையான கடிகாரங்களுக்கான விளம்பரத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரஹ்மானுக்கு மேலும் பல வாய்ப்புக்கள் வாய்த்தது.

அத்தனைக்கும் சிறப்பாக இசையமைத்த ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கினார். மேலும் அவர் Parry's, Leo Coffee, Boost, Titan, Premier Pressure Cooker, Asian Paints போன்ற பல பிரபலமான விளம்பரங்களுக்கும் இசையமைத்தார். 300இற்கு மேற்பட்ட சிறு இசைக் கோவைகளுக்கு இசையமைத்த பின் அவருக்கு ஒரு நன்மதிப்பு மக்கள் மத்தியில் பறவத் தொடங்கியதுடன் விருதுகளையும் பெற்றார். விளம்பரங்களுக்கு இசையமைப்பதில் ஏறத்தாழ 5 ஆண்டுகளைச் செலவழித்தார்.

1989இல் அவரது சொந்த செலவில் Panchathan Recording Inn. எனும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை தனது வீட்டுடன் இணைத்துக் கட்டி உருவாக்கினார். அதில் அவர் சவுண்ட் என்ஜினீரிங், வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பு பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அவரது வாழ்வில் திருப்புமனை ஏற்ப்பட்டது, புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினத்தின் சந்திப்பின் பின்னராகும். அவரது ரஹ்மானுடனான முதல் சந்திப்பிலேயே ரஹ்மானின் திறமையை உணர்ந்து அவரது சூப்பர் ஹிட் திரைப்படமான "ரோஜா" வின் இசையமைப்பாளராக ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார். இதில் ரஹ்மான் அவரது திறமைக் கடலின் ஒரு துளியை மட்டும் சிந்தினாலும் அவ்வருடத்தின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.

அதன் பின்பு அவருக்கு தெற்கிலிருந்தும், ஹிந்தித் திரையுலகிலிருந்தும் பல்வேரு வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின. ரங்கீலா, பாம்பே(Bombay) ஆகிய திரைப்படங்கள் அவரது புகழை மேலும் உயர்த்தியது.

பின்னர் 3 வருடங்களில் 4 மில்லியன் விற்பனையான அவரது ஆல்பங்களினால் உலகம் முழுவதும் அவரைத் திரும்பிப் பார்த்தது. ஏன் ஆங்கில இசைக் கலஞர்கள் கூட ஆடிப் போய்விட்டார்கள். இதனால் பல இசை விற்பனை நிறுவனங்கள் இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு இருந்தன். ரஹ்மான் Bombay திரைப்படத்தில் தனது பாடும் திறமையையும் வெளிக்காட்டியிருந்தார். Bombay படத்துக்குப் பின் "தில் சே(தமிழில் 'உயிரே')" படத்திலும் பாடியிருந்தார்.

திரைப்படங்களுக்கு இசையமைத்தாலும் சில ஆல்பங்களையும் உருவாக்குவதிலும் ரஹ்மான் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் வெளிவந்த "வந்தே மாதரம்" எனும் ஆல்பம் சிறு பிள்ளைக்குக் கூட தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்திருந்தது. இந்த ஆல்பம் உலகம் முழுவதிலும் 28 நாடுகளில் வெளியிடப்பட்டது. இன்றும் கூட இந்தியர்களில் 7/8 பகுதியினர் இப்பாடல் ஒலிபரப்பப்படும் போது இன, மத, மொழி பேதமின்றி எழுந்து நின்று மரியாதை அளிக்கின்றனர்.

அதன் பின்னர் வெளிவந்த ஆல்பம் "ஜன கன மன", இதில் பல மேதைகளுடன் இணைந்து ரஹ்மான் பணியாற்றினார். இவையிரண்டு ஆல்பங்களும் Sony Music நிறுவனத்தின் அனுசரணையிலேயே வெளிவந்தது. இவை மட்டுமல்லாது "Bombay Dreams" எனும் ஆல்பத்தையும் வெளியிட்டார். இதன் உருவாக்கத்தின் போது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கலைஞர்களான் Apache Indian, David Byrne, Michael Jackson மற்றும் Andrew Webber Lloyed ஆகியோருடன் பணியாற்றியமை சிறப்பாகும்.

ரஹ்மான் 2005ம் ஆண்டு வரை Panchathan ஸ்டூடியோவில் தொடர்ந்து பாடல்களைப் பதிவு செய்தார். பின்னர் அவர் தனது ஹை டெக் ஸ்டூடியோவான A. M. Studioவில் பதிவு செய்யத் தொடங்கினார்.

இது ஆசியாவில் மிகவும் உயர் தொழில் நுட்பத்துடன் இயங்கும் ஸ்டூடியோக்களில் ஒன்றாக இருக்கின்றமை மற்றொரு சிறப்பம்சமாகும். பின்னர் அவர் 2006இல் K. M. Musiq எனும் இசைப்பள்ளியை நிறுவினார். இதில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் இடம்பெறுகின்றது.


இக்கலைஞன் தன் சுய நலத்தை மாத்திரம் கருதாது, சமூக நலத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுபவராவார். அதற்குத் தகுந்த சான்றாக "Taj Anthem" மற்றும் "Pray For Me Brother" போன்ற ஆல்பங்கள் காணப்படுகின்றன. தாஜ் கீதம் கால நிலை மாற்றத்தால் உலகம் போற்றும் காதலின் சின்னமான தாஜ்மகாலைக் காப்பாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். அதே போன்று "ஒருவர் மீது ஒருவர் இரக்கம் காட்ட என்ன தயக்கம்?" எனும் தொனிப் பொருளில் வெளிவெந்த ஆங்கில ஆல்பமான "Pray For Me Brother" மற்றொரு சான்றாகும்.

அதுமட்டுமல்லாது 2020இற்குள் வறுமையை இந்தியாவிலிருந்து விரட்டும் நோக்குடன் இவரால் "A. R. Rahman Foundation" எனும் சேவை அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. இதில் எவ்வினத்தவர்க்கும் பாரபட்சமில்லாது ஏராளமான உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றது.

இந்த சாதனை மன்னன், வெற்றியின் மற்றொரு பெயரான 'ரஹ்மான்' பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அவர் பெற்ற விருதுகளில் சர்வதேசப் புகழ்வாய்ந்த விருதுகளின் பெயர்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.


ரஹ்மான் Oscar விருதுகளுடன்...
ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-

* Grammy விருது- 2 முறை

* MTV Asia விருது- 2 முறை

* MTV வீடியோ இசை விருது- 1 முறை

* Academy விருது- 2 முறை

* BAFTA விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Satellite விருது- 1 முறை

* World Soundtrack விருது- 1 முறை

* தேசிய திரைப்பட விருது- 4 முறை

* Filmfare விருது- 14 முறை

* Filmfare(தெற்கு) விருது- 12 முறை

* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை

* விஜய் விருது- 1 முறை

* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.

இதை எழுதும்போதுதான் இவ்வருடம் ரஹ்மானுக்கு "பத்மபூஷன்" விருது கிடைத்துள்ளதாக அறிந்தேன். இவை தவிர இவர் பெற்ற விருதுகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது Anna, Aligarh மற்றும் Middlesex ஆகிய பல்கலைக் கழகங்கள் இணைந்து ரஹ்மானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கியதாகும்.

எத்தனை புகழ் தன்னைத் தேடி வந்தாலும் அத்தனையையும் இறைவனிடமே அர்ப்பணித்துவிட்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனும் கொள்கையுடன் வாழ்ந்துவரும் உன்னத கலைஞன் A.R.ரஹ்மான்..!!

Category: 0 comments

0 comments:

Post a Comment